

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ பாஸ் நடைமுறை கொண்டு வந்துள்ளதால், தேனி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் இ பாஸ் எடுக்காத வாகனங் களுக்கு இ பாஸ் எடுத்த பின்பே அனுமதி வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர் விடுமுறை காலங்கள் மற்றும் கோடை விடுமுறை பருவ காலங்களில் அதிக அளவு வாகனங்கள் வருவதால், கடந்த 10 ஆண்டுகளாக கொடைக்கானல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் அவதியுறும் நிலை ஏற்பட்டது.


இதைத்தொடர்ந்து மலைப்பகுதிகளில் அமைந்துள்ள கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளுக்குச் செல்ல, இ பாஸ் நடைமுறையை செயல்படுத்தி, கடந்த ஒரு வருடமாக வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிட மாவட்ட நிர்வாகங்களை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.
அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல், இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிய, எண்ணிக்கை கட்டுப்பாடுகள் இல்லாத இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டு, வானங்கள் உள்வரும் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் கணக்கில் எடுத்தது.
அதன் தகவல் அடிப்படையில் தற்போது வார நாட்களில் நாள் ஒன்றுக்கு நான்காயிரம் வாகனங்கள் எனவும், வார இறுதி சனி ஞாயிறு தினங்களில் நாள் ஒன்றுக்கு 6000 வாகனங்கள் எனவும் எண்ணிக்கை கட்டுப்பாடுகளை கொண்ட இ-பாஸ் நடைமுறை இன்று முதல், அமல் படுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு செல்லும் பிரதான சாலையான வத்தலகுண்டு கொடைக்கானல் சாலையின் தேனி மாவட்ட எல்கையான காமக்காப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் அனைத்தும் இ பாஸ் பெறப்பட்டுள்ளதா? என பரிசோதனை செய்த பின்பு அனுமதிக்கப்பட்டு வருவதோடு, இ பாஸ் எடுக்காத வாகனங்கள் அந்த பகுதியிலே நிறுத்தி இ பாஸ் எடுத்த பின்பு கொடைக்கானல் செல்ல கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அனுமதித்து வருகின்றனர்.

