• Wed. Nov 29th, 2023

Bhakthi

விநாயகரை வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்…!

விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகம்புல் வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம்  பெருகும்.

விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார்  ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி,  சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந்தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர்  பெற்றார்.

முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு  குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடுவார்கள்.

Onbathu Kolum

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத் தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினியிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.

பிள்ளையார் பற்றிய நாட்டுப்புறப்பாடல்

பிள்ளையார் பற்றி அந்தக்காலத்தில் தாத்தாக்களும், பாட்டிகளும் பேரன் பேத்திகளுக்கு பாட்டுகளின் மூலம் அவரது பெருமையை எடுத்து விளக்குவார்கள். கேட்பதற்கு இவை
நாட்டுப்புறப்பாடல்கள் போல இனிமையாக இருக்கும்.

குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழு
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
  தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.

இந்தப்பாடல்களை முதியவர்கள் தங்கள் பொக்கை வாயால் பாடும் போது கேட்பதற்கு இனிமையாக இருக்கும். குழந்தைகளுக்கு பாடல்கள் மூலம் பக்தியை உணர்த்துவது மிகவும் எளிமையானது என்பதால் இந்த பாடல்கள் அந்தகாலத்தில் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்பட்டன.

விநாயகர் அகவல் பற்றி காஞ்சிப் பெரியவர் கருத்து

மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று  பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், உ<லகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.

வாழ்வை வளமாக்கும் விநாயகர் நிவேதனம்

விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப்பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிக் கிடக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும். மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.

கரும்பு:  கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும்  இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்
திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

சதுர்த்தி வழிபாடு

நாயகர் சதுர்த்தியன்று விநாயகர்  அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடைய  காரிய சித்திமாலையின் விளக்கம் தரப்பட்டுள்ளது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த  காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி  உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம். கபிலநாயனார் இத்தகவலை எழுதியுள்ளார்.

* உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும்,
ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள்செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம்.

* கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம்.

* தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும்நீக்குபவரும், தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.

* திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்தவருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழ்ந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம்.

* உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.

* வேதங் களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும், எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.

* நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்லமாகப் புகுகின்றோம்.

* யாராலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், எல்லாவற்றையும் அறியச் செய்யும் இறைவனாகவும், ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியே! உன்னைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.

விநாயகருக்கு உகந்த கிழமை

இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அவர்கள் கணேஷ் சதுர்த்தி என்று சிறப்பான அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவ்விழாவைக் கொண்டாடுவர். பத்து நாட்களுக்கும் மேலாக பக்திப்பரவசத்தில் இம்மாநிலமே மிதக்கும். விநாயகர் இம்மக்களுக்கு குலதெய்வமாகவும், வெற்றிதரும் கடவுளாகவும் போற்றப்படுகிறார். இங்கு திரும்பிய இடமெல்லாம் இவருக்கான கோயிலும் வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். மங்கல்வார் என்னும் செவ்வாய்க்கிழமை உகந்தநாளாக எண்ணி ஆலய தரிசனம் செய்ய திரளாக விநாயகர் கோயிலுக்குச் செல்வார்கள். கொழுக்கட்டை, மோதகம் போன்ற பாரம்பரிய பிரசாத வகைகளோடு, வடநாட்டுக்கே உரிய பர்பி, லட்டு, பால்பேடா போன்றவற்றையும் நிவேதனமாகப் படைப்பர்.  கடைசிநாளில் கணபதி பப்பா மோரியா என்னும் கோஷம் எழுப்பி வழியனுப்புவது உள்ளத்தை உருகச் செய்வதாகும். மங்களம் தரும் விநாயகப்பெருமானே! இன்று சென்று வரும் ஆண்டில் திரும்பி வருக என்பதே இதன் பொருள்.

விநாயகருக்குரிய 11 விரதங்கள்

1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும்.

விநாயகர் துதி மந்திரம்

ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம

அண்ணனுக்கும் தம்பிக்கும்  ஆறெழுத்து மந்திரம்  முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் போல, விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஹும் என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். முருகப் பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டான ஆயிரங்கண்களை இம்மந்திரத்தை ஜெபித்தே நீங்கப்பெற்றார்.

வழிபாட்டுக்குரிய விநாயகர் வடிவங்கள்
 
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரின் திருமேனியை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்திநாளில் வழிபாட்டிற்கு மண்ணால் அமைத்த விநாயகரையே வழிபாடு செய்ய வேண்டும். பூஜித்த பின் இவ்விநாயகரை ஆறு, குளம், ஏரிகளில் கரைத்துவிடலாம். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

ஐந்து சுவாமி பூஜை

பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்