• Mon. Apr 21st, 2025

எம்புரான் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி.., தமிழக விவசாயிகள் போராட்டம்!

முல்லைப்பெரியார் அணை குறித்து தவறாகச் சித்தரிக்கும் எம்புரான் திரைப்படத்தை தடை செய்யக் கோரி, தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பட தயாரிப்பாளரான கோகுலம் கோபாலனின் நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸ் அருகே பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

கோகுலம் கோபாலன் தயாரிப்பில், பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் தற்போது வெளியான மலையாள மொழி திரைப்படம் எம்புரான். இப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், ஆண்ட்ரியா, சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த எம்புரான் மலையாள திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து விஷமத்தனமான கருத்துக்களை வலிய திணித்திருக்கும் இயக்குனர் பிருத்திவிராஜை கண்டித்தும், இனவெறியை தூண்டும் இந்தப் படத்தை தயாரித்த கோகுலம் சிட் பண்ட் உரிமையாளர் கோபாலனை கண்டித்தும், நடிகர் மோகன்லாலை கண்டித்தும், எம்பிரான் திரைப்படத்தை தடை செய்ய கோரியும், பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.மனோகரன் தலைமையில், தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக கம்பம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே இருந்து ஊர்வலமாக வந்த விவசாயிகள், ஊர்வலத்தில் இந்த திரைப்படத்தை தடை செய்ய கோரியும், தயாரிப்பாளரை கண்டித்தும், இயக்குனரை கண்டித்தும், நடிகர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கம்பம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம் பேசுகையில், எம்புரான் படத்திற்கும் அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல்,முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை கக்க வேண்டிய தேவை எங்கே வந்தது, படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியார், முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி பேசும் பேச்சு கண்டிக்கத்தக்கது. முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா, 999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டீஷ்காரன் போய்விட்டானாம், மன்னராட்சியும் போய் விட்டதாம், ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்துநிற்கிறது என்றும், அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்றும் தேவையில்லாத வசனங்கள். கேரளாவில் நடக்கும் ஒரு கேடுகெட்ட அரசியலுக்கு, பலிகடாவாக முல்லைப் பெரியாறு அணையை மாற்றுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பிரித்திவிராஜ் சுகுமாரன் மறுபடியும் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை மீது கை வைத்து தன் இனவெறியை வெளிப்படுத்தி இருப்பது இரு மாநில உறவை கெடுப்பதாகும்.

எம்புரான் மலையாள திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணையை குறித்து விஷமத்தனமான கருத்துக்களை திணித்திருக்கும் இயக்குனர் பிருத்திவிராஜை கண்டித்தும், இந்தப் படத்தை தயாரித்த கோகுலம் சிட் பண்ட் உரிமையாளர் கோபாலனை கண்டித்தும், இந்தப் படத்தை தடை செய்யக் கோரியும் இன்று போராட்டம் நடந்துள்ளது. படத்தை தடை செய்யாவிட்டால் இந்த போராட்டம் ஆனது தென் தமிழகம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் நடைபெறும் என்றார். நிகழ்ச்சியில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் பார்த்திபன், கண்ணன், சிவமணி, வாழை கணேசன், தவமணி மற்றும் கூடலூர் ராஜீவ் காந்தி, பாரதிய கிசான் சங்கம் டாக்டர் சதீஷ்குமார், மற்றும் விவசாய சங்கங்கள், நில வணிகர் நல சங்க உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.