• Fri. Mar 29th, 2024

செஸ் ஒலிம்பியாட்- வெளிநாட்டு வீரர்கள் வருகை

ByA.Tamilselvan

Jul 24, 2022

செஸ் ஒலிம்பியாட்- வெளிநாட்டு வீரர்கள் வருகை
வரும் 28ம் தேதி துவங்கஉள்ள செஸ்ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வெளிநாட்டு வீரர்கள் சென்னை வரத்துவங்கியுள்ளனர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வரத் தொடங்கி உள்ளனர்.
மடகாஸ்கர் தீவை சேர்ந்த வீரர்கள் நேற்று சென்னை விமானநிலையம் வந்தனர். அந்த அணியில் ஆன்ட்ரியனியனா, ஹெரிடியனோ, டொவினா, சார்லி மகானிகஜா ராஜெரிசன், ராகோடாமகரோ, ராமலன்சனோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஹங்கேரி, ஜாம்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு வீரர்களை வரவேற்ற அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் உதவியுடன் ஓட்டலுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று தங்க வைத்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கில் இன்று பயிற்சி போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடக்கிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 1,414 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *