• Tue. Mar 25th, 2025

வரவேற்பை கொண்டாடிய ரைட்டர் படக்குழுவினர்

அறிமுக இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், சமுத்திரக்கனி, ஹரிகிருஷ்ணன், இனியா, திலிபன் மற்றும் பலர் நடித்த படம் ‘ரைட்டர்’. டிசம்பர் 24 அன்று வெளிவந்த படங்களில் இப்படத்திற்குத்தான் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைத்தது.

இயக்குனர் பா.ரஞ்சித் இன்னும் சிலருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த பிராங்க்ளினை இப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகப்படுத்தினார்.

படத்திற்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். “பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரஞ்சித் தயாரித்துள்ள படம் ‘ரைட்டர்’. அடுத்து அவரது மற்றொரு உதவியாளர் சுரேஷ் மாரியை இயக்குனராக அறிமுகப்படுத்தி ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார் ரஞ்சித்.

சமீபத்தில்தான் தனது படங்களில் பணியாற்றுபவர்களுக்கு மற்றவர்கள் வாய்ப்பு தருவதில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் ரஞ்சித். அவர் தயாரிக்கும் படங்களில் அவரது உதவியாளர்களுக்கு அவர் இயக்குனராகும் வாய்ப்பைத் தந்து கொண்டிருக்கிறார். ரைட்டர் படம் வணிகரீதியாக வெற்றியா தோல்வியா என்பது இந்த வாரக்கடைசியில்தான் தெரியும்.