

இந்தியத் தொழிலதிபரும் வள்ளலும் ஆனவர் ராம அழகப்பச் செட்டியார். விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளையும் ஆய்வுக்கூடங்களையும் தமது செலவில் நிறுவி தமிழகம் இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர். சிவகங்கை மாவட்டத்தில் கோட்டையூரில் கே.வி.அழ.ராமநாதன் செட்டியார் மற்றும் உமையாள் ஆச்சி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். தன் 21ஆவது வயதில் சென்னை மாகாணக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின் இந்தியக் குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணனுடன் தோழமையில் இருந்தார். சட்டம் பயில இங்கிலாந்து சென்று சார்ட்டட் வங்கி,லண்டனில் பயிற்சி பெறும் முதல் இந்தியராக விளங்கினார். மிடில் டெம்பிள் வழக்கறிஞர் அவையில் தேர்வானார். அவரது துடிப்பான இயல்பால் லண்டன் கிரயோடனில் உள்ள பயிற்சிக் களத்தில் விமான ஓட்டி உரிமம் பெற்றார். தமது தொழில் முயற்சியை துணி தயாரிப்பில் கொச்சி டெக்ஸ்டைல்ஸ் என்று 1937ஆம் ஆண்டு துவக்கினார். பின்னர் அழகப்பா டெக்ஸ்டைல்ஸ் ஆலையை கேரளாவில் திருச்சூர் அருகே புதுக்காடு என்ற இடத்தில் துவங்கினார். இருப்பினும் கல்விப்பணியில் நாட்டம் கொண்டு தமது பாதையை மாற்றிக் கொண்டார். இவரின் கல்விப்பணி திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறையை ஏற்படுத்த 1943ஆம் ஆண்டு ஒரு இலக்கம் ரூபாய்கள் நன்கொடை வழங்கியதுடன் துவங்கியது. இவர் செய்த நன்கொடைகள் பல.. தான் பிறந்த ஊரான கோட்டையூரில் ஓர் உயர்நிலைப் பள்ளி, பின் சென்னை வேப்பேரியில் ஓர் பெண்கள் தங்கும் விடுதி, எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் நாட்டு மருத்துவ ஆய்வினுக்காக நன்கொடை என்று கூறிக்கொண்டே போகலாம். இத்தகைய வள்ளல் அழகப்பச் செட்டியார் பிறந்த தினம் இன்று..!
