திண்டுக்கல் தபால் நிலையம் முன்பு வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், இரயில்வே துறையில் 29 ஆயிரம் தொழிலாளர்களின் நீக்கத்தை கண்டித்தும், சி.பி.ஐ. சிபிஎம் விசிக, சி.பி.ஐ.எம்எல் கட்சி சார்பாக மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசுப்பணிகளில் தமிழர்களை புறக்கணித்தும், இரயில்வே துறையில் 29 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், வணிகர்கள் பயன்படுத்தும் வணிக சிலிண்டர் விலையை உயர்த்திய மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) மாவட்ட செயலாளர் ஏ.பி.மணிகண்டன் தலைமை தாங்கினார். சி.பி.எம். மாவட்ட செயலாளர் பிரபாகரன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன்பாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் மணிகண்டன் பேசும்போது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. மத்திய அரசு பணிகளான தபால் மற்றும் வங்கி, இரயில்வே துறையில் வட மாநிலத்தவர்களை அதிகம் நியமனம் செய்து, தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. தினசரி வணிகர்கள் பயன்படுத்தும் சிலிண்டர்களையும் விலையேற்றம் செய்து, அவர்களின் வாழ்வாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர மத்திய அரசு பணியான இரயில்வே துறையில் ஒன்றிய மோடி அரசு 29 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இதை சி.பி.ஐ, சி.பி;.எம், விசிக மற்றும் சி.பிஐ.எம்.எல் கட்சிகள் வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் ஜி.ராணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் திருசித்தன், மாவட்ட துணை செயலாளர் இராமன், சி.பி.ஐ. கட்சி மாவட்ட பொருளாளர் பி.கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லெனினிஸ்ட் (விடுதலை) மாவட்ட செயலாளர் முருகேசன், மாநில குழு உறுப்பினர் ரவி, சி.பி.ஐ. செயற்குழு உறுப்பினர்கள் ராஜாமணி, ஒட்டன்சத்திரம் கணேசன், சந்திரசேகர், பழனி கௌசல்யா, சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவராஜ், சக்தி, தெய்வேந்திரன், இலக்கியா உட்பட பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். நிறைவாக சி.பி.எம். கட்சி மாநகர பொருளாளர் அரபுமுகமது நன்றி கூறினார்.







