

ஒருவரின் பாவ புண்யங்களுக்கு தக்கபடி தண்டனைகள் வழங்கி தனி ஆளாக தர்ம பரிபாலனம் செய்து வந்தார் யமதர்மராஜன். அப்பொழுது கலி பிறந்தது. அதர்மங்கள் அதிகரித்தது. அதர்மங்களின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்ததால் யமதர்மராஜனால் பாவ புண்ணிய கணக்குகளை தனியாக சரியாக நிர்வகிக்க முடியவில்லை.
அவர் சிவபெருமானை அணுகி தனக்கு வேலை அதிகரித்துவிட்டதால் தனியாக செய்யமுடியவில்லை. ஆகவே ஒரு உதவியாளர் தேவை என்று விண்ணப்பித்துக்கொண்டார்.

அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் பார்வதி இருக்கும் இடம் நோக்கி சென்றார். சக்தி இல்லையேல் ஏது சிவம்?. அப்பொழுது பார்வதி தேவியார் தங்க தாம்பாளம் ஒன்றில் ஒரு உருவத்தை வரைந்து கொண்டிருந்தாள். அந்த உருவம் தனது கையில் ஒரு நோட்டு புத்தகத்தையும் எழுத்தாணியையும் வைத்திருந்தது. இதைப்பார்த்த சிவபெருமான் லோக மாதாவிடம் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். பார்வதியும் தான் தங்க தாம்பாளத்தில் எழுதி வைத்திருந்த சித்திரத்தை பார்த்து வாயினால் ஊத அந்த உருவம் உயிர்பெற்றது. சிவபெருமான் அந்த உயிர்பெற்ற உருவத்திற்கு ரகசியத்தை காக்கும் சக்தியை கொடுத்து எமதர்மராஜனுக்கு உதவியாக இருக்க பணித்தார். அவரும் மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி அதன் ரகசியத்தையும் காத்து வந்தார்.
சித்திரத்திலிருந்து வந்ததாலும் ரகசியத்தை காப்பவராக இருந்ததாலும் அவர் சித்திரகுப்தன் (குப்தன் என்றால் ரகசியத்தை காப்பவன் என்று பொருள்) என்ற பெயர் பெற்றார்.
இவ்வாறு உருவான சித்திரகுப்தன் பாவ புண்ணிய கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது பூலோகத்தில் பலர் அறியாமல் செய்த பாவங்களின் கணக்கு மிக அதிகமாக இருந்தது.
அறியாமல் செய்த பாவங்களுக்கு நாம் தண்டனை கொடுக்கிறோமே என்று விசனப்பட்டு அறியாமல் செய்த பாவங்களை பொறுத்து மக்களை காத்து ரஷிக்கவேண்டும் என்று பரமசிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவபெருமான் சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வேண்டுபவர்களுக்கு அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விலக்கு அளிக்கும் சக்தியை சித்திரகுப்தனுக்கு அளித்தார். சித்திரகுப்தனும் ஜனங்களை அறியாமல் செய்த பாவங்களிலிருந்து காத்தருளிவருகிறார்.
சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதுபோலவே அன்று செய்யும் தானம் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவதும் உறுதி.
சித்ரா பவுர்ணமியன்று தானங்கள் பல செய்யவேண்டும். முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை.
சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் ஒன்று காஞ்சிபுரத்தில் இருக்கிறது. முடிந்தவர் நேரில் அந்த கோவிலுக்கு சென்றும் முடியாதவர் மனதளவிலும் வரும் சித்ரா பவுர்ணமி அன்று சித்திரகுப்தனை வணங்கி நாம் அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விமோசனம் பெறுவோம்.
சித்ரகுப்தருக்கு சன்னதி உள்ள வேறு சில ஆலயங்கள்
- கும்பகோணம் அருகில், வாஞ்சிநாதன் கோவிலில் எமதர்மராஜர் சன்னதிக்குள் சித்ரகுப்தரும் உள்ளார்
- அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோயில்
- தேனிமாவட்டம் கோடாங்கிபட்டி அருகே தீர்த்ததொட்டி
- கோவை சிங்காநல்லூர் அருகே வெள்ளலூர்
- தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மாணிக்கவாசகர் கோவிலில் சிவனார் சன்னதிக்கு எதிரே ஒரு தனி சன்னதியில் சித்ரகுப்தர் உள்ளார்.
- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பட்டக்காரத்தெருவில் நாராயணன் தங்கை கோயிலுக்கு அருகில் ஸ்ரீவாலாம்பிகை சமேத ஸ்ரீசோழேஸ்வரர் திருக்கோயில்
- திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மங்களம் செல்லும் வழியில் சின்ணான்டிபாளையத்தில் சித்திரகுப்தன் கோயில் உள்ளது

