தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு மற்றும் கடற்கரைகள் மூடல் குறித்த விரிவான விபரங்கள் இதோ…
மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே 1- 9- 2021 முதல் 9,10,11 மற்றும் 12 ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல, பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள் கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான நிலையான வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மேற்படி விடுதிகளில் பணியாற்றும் விடுதி காப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும். தற்போது கேரள மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று பரவல் நிலையினைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திலிருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் அதிகளவில் பொதுமக்கள் குழந்தைகளுடன் ஒரே இடத்தில் கூடினர். இதனால், நேற்று அதிகாலை முதல், இரவு வரை மெரினா கடற்கரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. பொதுமக்கள் முகக் கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது. இதுதொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில், இன்று தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.