• Sat. Apr 27th, 2024

விநாயகர் சிலை வைத்து வழிபட தடை.. தமிழக அரசு அறிவிப்பு!

vinayagar

தமிழ்நாட்டில் வரும் செப் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. கொரோனா 2வது அலை மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து வரும் செப் 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று சிலைகளை எடுத்துச் செல்வதற்கும், கரைப்பதற்கும் அல்லது பொது இடங்களில் சிலைகளை ஊர்வலமாக நீர்நிலைகளில் அனுமதி மறுக்கப்படுகிறது.

விநாயகர் சிலைகளைப் பொதுமக்கள் வீடுகளிலேயே வைத்துக் கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் வீட்டின் அருகே உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை, கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் இச்செயல்பாட்டிற்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்படுகிறது.

சிலைகளைக் கரைப்பதற்கும் மேற்குறிப்பிட்ட அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும். தனிநபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது.இவ்வனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ்வகையிலேனும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த விழாவிற்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொது மக்கள் தவறாது முகக்கவசம் அணிவதோடு, அவ்விடங்களில் பொருட்கள் வாங்க இடைவெளியைக் நிற்கும் கட்டாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் இதர இடங்களில் கிறித்தவ சமயத்தாரால் கொண்டாடப்படவுள்ள மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின்போது, இடங்களில் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *