


தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவு, புதுச்சேரியில் பாஜகவுக்கு ஆதரவு என இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள புதிய பாரதம் கட்சியின் அறிவிப்பால் அக்கட்சியின் நிர்வாகிகளை புலம்ப வைத்திருப்பதுடன் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுகவுக்கு முதல் கட்சியாக புரட்சி பாரதம் கட்சி ஆதரவு தெரிவித்தது. இந்த கட்சிக்கு திருவள்ளூர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதிகள் எதும் ஒதுக்கப்பட்டாததால் அக்கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். இதனால், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி வெளியேறும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பதாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தார்.
தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் பூந்தமல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெகன்மூர்த்தி: தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். அதிமுகவின் முக்கிய தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்ததின் பேரில் தற்போது ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி பாரதம் கட்சி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. புரட்சி பாரதம் கட்சியின் இந்த இரட்டை நிலைபாடு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

