• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பள்ளியின் சுற்றுச்சுவர் பலத்த சேதம்..,

BySeenu

May 1, 2026

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வெயில் வாட்டி வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி கோவையில் காலையில் வெயில் வாட்டி வந்த நிலையில் மதியத்திற்கு மேல் வானிலை மாறியது. மதியத்திற்கு மேல் இருந்து பல்வேறு பகுதிகளில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் புறநகர் பகுதிகளான துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், தடாகம் சாலை இடையர்பாளையம் கணுவாய் சோமயனூர் திருவள்ளூர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்து பல பகுதிகளில் மின் கம்பிகள் மீது விழுந்து மின் தடையும் ஏற்பட்டது. இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சுமார் 1.5 கிலோ மீட்டர் நீளமுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் மேல் பகுதியில் மழிநீர் வடிய போதிய வசதி இல்லாததால் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் அவ்வழியாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அதேபோல் கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் நேற்று மாலை பலத்த பெய்த காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது.

இதன் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் பலத்த சேதம் அடைந்துள்ளது. காற்றின் வேகத்தால் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த சோலார் பேனல்கள் பறந்து வந்து தரையில் விழுந்துள்ளது. மேலும் சாலையின் குறுக்கே விழுந்ததால் அவ்வழியாக போக்குவரத்தும் பாதிகப்பட்டது.

இதையடுத்து மழை நின்றதும் இரவு மாநகராட்சி ஊழியர்கள் அறுவை இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மரத்த்தின் ஒரு பகுதியை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். ஆபத்தான நிலையில் மீதமுள்ள மற்ற மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.