• Sun. Mar 16th, 2025

தமிழகத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,694 புகார்கள் பதிவு

Byவிஷா

Apr 4, 2024

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,694 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் என்ற செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை புகைப்படம் அல்லது விடியோ பதிவு செய்து அனுப்பலாம். இதில் அனுப்பக்கூடிய புகார்கள், தகவல்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பப்படும். அவர்கள் புகாரின் உண்மைத் தன்மையை குறித்து ஆராய்ச்சி செய்வர்.
அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி, அதிக அளவு புகார்கள் பெறப்பட்ட மாவட்டமாக கரூர் மாவட்டம் உள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து அளிக்கப்பட்ட புகார்களில் 372 உண்மைத் தன்மையுடவை என கண்டறியப்பட்டுள்ளது.
2 வது இடத்தில் சென்னை மாவட்டம் உள்ளது. சென்னை மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், 209 புகார்கள் சரியானவை என கண்டறியப்பட்டுள்ளது. 3 வது இடத்தில் வேலூர் மாவட்டம் உள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து அளிக்கப்பட்ட புகார்களில் 116 உண்மைத் தன்மையுடவை என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு சில மாவட்டங்களில் இருந்து சரியான ஆதாரங்களுடன் புகார்களே வரவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் இருந்து ஒருசில புகார்கள் வந்துள்ளது. இருப்பினும் அவை உரிய ஆதாரங்களுடன் இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டுள்ளன. எனவே, இந்த இரு மாவட்டங்களும் புகார்களே பதிவாகாத மாவட்டங்களாக உள்ளன. இதுவரை மொத்தம் உண்மைத் தன்மையுடைய 1,694 புகார்கள் பதிவாகியுள்ளன.