
முல்லைப்பெரியாறு அணை விவகாரம். குமுளியை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள மாநில எல்லையான குமுளியை முற்றுகையிட முயன்ற பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர்களை லோயர்கேம்பில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்க கோரியும் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயரத்தக் கோரியும், தமிழக கேரளா எல்லையில் உள்ள கேரள மாநிலம் குமுளியில் கேரளா அரசியல் கட்சியினர் சமூக அமைப்புக்கள் உள்ளிட்டவை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கேரளா அரசு அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறி இன்று கேரள மாநில எல்லையான குமுளியை பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்பர் பாலசிங்கம் தலைமையில் விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
அவர்களுடன் தமிழ்நாடு நில வணிகர்கள் நல சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ் மனோகரன் தலைமையில் நிலவணிகர் நல சங்கத்தினர், தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதற்காக தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்-பில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டவர்கள், கேரள அரசுக்கு எதிராகவும் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக விஷமக் கருத்துக்களை பரப்புவர்களை கண்டித்தும் கோசங்களை எழுப்பிச் சென்றனர்.

அப்போது லோயர் கேம்ப்-ல் உள்ள பென்னிகுயிக் மணி மண்டபம் முன்பாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்தால் மறியலை கைவிட்டு, பென்னி குயிக் மணிமண்டபம் முன்பாக பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசையும், அரசியல் வாதிகளையும், தனியார் அமைப்புகளையும் கண்டித்து கண்டன உரையாற்றினர். இதனால் குமுளி மலைச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

முற்றுகைப் போராட்டத்தில், பெரியார் வைகை பாசன விவசாய சங்க தலைவர் பொன் காட்சி கண்ணன், நில வணிகர் நல சங்க தலைவர் பார்த்திபன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

