பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூரில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் ஏரி புனரமைப்புப் பணிகளை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பொழிச்சலூரில் அமைந்துள்ள வடக்குத் தாங்கல் மற்றும் தெற்குத் தாங்கல் ஏரிகள் பல ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பு, முட்புதர் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைகள் குவிந்த நிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் ஏரிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை முன்வந்து சுமார் 22 லட்சம் ரூபாய் செலவில் ஏரிகளை தூர்வாருதல், குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுதல், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, மழைக்காலம் நெருங்கி வருவதால் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்குமாறு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், ஏரிகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிர்வாகிகளை சால்வை அணிவித்து பாராட்டிய அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இந்த முயற்சி பொதுமக்களுக்கு பெரும் பயன் அளிக்கும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது உள்ளாட்சி பிரதிநிதிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.




