• Thu. Oct 10th, 2024

அடுக்கடுக்காய் கேள்வி கேட்ட ஸ்டாலின்.. ஆடிப்போன எடப்பாடி!

By

Sep 9, 2021 , ,

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் இன்று முதல்வர்
மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொலை, கொள்ளை கட்டப்பஞ்சாயத்து போன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை’ என்று தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரை முருகன், ‘தூத்துக்குடியில் ஜீப் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிமுக ஆட்சியில் தானே. அப்போது நீங்கள் தானே முதல்வர்’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘கலவரங்களை தவிர்க்க துப்பாக்கிச்சூடு தவிர்க்கமுடியாது என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். தனிப்பட்ட பிரச்னைக்காக துப்பாக்கிசூடு நடத்தவில்லை’ என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கொடநாடு விவகாரம் சாதாரண விஷயமல்ல. முன்னாள் முதலமைச்சரின் முகாமாக இருந்த இடத்தில் நடைபெற்ற சம்பவங்களை எதில் சேர்ப்பது. கொடநாடு சம்பவம் நடந்த பிறகும் நீங்கள் தானே 4 ஆண்டுகள் முதல்வர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது ஏன் ?’ ஏன் என அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘கொடநாடு எஸ்டேட் தனியாரின் சொத்து. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின் அங்கு போடப்பட்டிருந்த பாதுகாப்பு அகற்றப்பட்டது’ என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், ‘கொடநாடு வழக்கை விசாரிக்க கூடாது என நீதிமன்றத்திற்கு எதற்காக சென்றீர்கள்?’ என்றார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘கொடநாடு சம்பவம் நடைபெற்றவுடன் முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கிற்கு நாங்கள் தடை கேட்கவே இல்லை, நீதிமன்றத்தில் வழக்கு முறைப்படி நடைபெற்று வருகிறது. எங்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா இன்னும் தடையின்றி கிடைத்து வருகிறது’ என்றார். அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ‘குட்கா இன்னும் இருக்கிறது. அதனை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குட்கா வழக்கில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *