• Sat. Apr 20th, 2024

கொடநாடு வழக்கில் அதிரடி திருப்பம்.. நேபாளம் விரைந்த தனிப்படை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் காவலாளி கிருஷ்ண தாபாவை தேடி தனிப்படையினர் நேபாளம் விரைந்திருக்கின்றனர்.
மாயமான கிருஷ்ணா இந்த வழக்கில் புகார் தாரராவார். கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தாக்கியதில் ஓம் பகதூர் என்ற காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கிருஷ்ண தாபா மருத்துவ சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். கோடநாடு வழக்கில் தற்போது மேல் விசாரணை சூடுபிடித்திருக்கும் நிலையில், கிருஷ்ண தாபாவை விசாரணைக்கு அழைக்க தனிப்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அவர் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த 2020 ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்காக உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதன்பின் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. கிருஷ்ண தாபா நேபாளத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை கண்டுபிடித்து தரும்படி தமிழக காவல்துறை சார்பில் நேபாள அரசுக்கு முறைப்படி கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருஷ்ண தாபாவை தேடி 3 பேர் அடங்கிய தனிப்படையினர் நேபாளம் விரைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 103 பேரில் 42 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கோடநாடு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் தனபால், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான சயான் தனது குடும்பத்துடன் கோவையில் இருந்து கார் மூலம் கேரளா சென்ற போது விபத்தில் சிக்கினார்.

3வது நபரான சி.சி.டி.வி. ஆப்ரேட்டரும் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார். இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும் தனித்தனியாக விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், நீலகிரி திரும்பிவிட்டனர். சம்பவம் நடைபெற்ற இடங்களில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் குறித்து உயர் அதிகாரிகளிடம் நேரில் விளக்கி இருப்பதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *