• Sat. Apr 26th, 2025

சிவகாமி அம்மன் கோவில் குடமுழக்கு விழா

சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில் குடமுழக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில் 17 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்கோவில் கும்பாபிஷேக பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக பணிகள் முடிவடைந்து இன்று மகா கும்பாபிஷேக பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கப்பட்டு தொடர்ந்து, முதல் கால யாக பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள் என பல்வேறு பூஜைகள் நாள்தோறும் நடைபெற்று வந்தது. பின்னர் இன்று காலை ஆறாம் கால யாக பூஜைகள் நாடி சந்தானம், ரக்ஷாபந்தனம், பூரணாகுதி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 8.30 மணி அளவில் கலசங்கள் புறப்பாடாகி விமானத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் உள்ளிட்டோருக்கு சமகால மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீர் கொண்டு பக்தர்களுக்கு தீர்த்தவாரி தெளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

பின்னர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இவ்விழாவில் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இந்த மகா கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.