
நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் மக்கள் நலத்திட்டங்களையும், நலிந்தோருக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்னர். முதலமைச்சருக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, நடிகர் ரஜினிகாந்த், தவெக தலைவர் நடிகர்விஜய் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், “எனது சகோதரரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
