

டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு பணிகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்குவதற்கும், ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு இல்லம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இல்லத்தில் இரண்டு வளாகங்கள் உள்ளன. இந்த இரண்டும் சாணக்யபுரியின் ராஜதந்திர பகுதியில் அமைந்துள்ளன.
இதில் முதல் விருந்தினர் மாளிகைக்கு வைகை தமிழ்நாடு இல்லம் என்றும், இரண்டாவது விருந்தினர் மாளிகை பொதிகை தமிழ்நாடு இல்லம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தங்கியுள்ளார். அவரது அலுவலகமும் அங்கு இயங்கி வருகிறது. இந்த நிலையில் பொதிகை தமிழ்நாடு இல்லத்துக்கு இன்று காலை 10.45 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் டெல்லி காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்குள்ளவர்களை வெளியில் அனுப்பிவிட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில், தமிழ்நாடு இல்லத்திற்கும் தற்போது வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

