


ஒற்றைத்தலைமைதான் வேண்டும் என சிலர் செயல்பட்டதே அதிமுக தொடர் தோல்விக்கு காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தார். அவர் 77 கிலோ கேக் வெட்டி, தொண்டர்களுக்கு வழங்கினார்.

இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என விரும்புகின்றனர். ஜெயலலிதா இருந்தவரை கட்சியை உச்சத்தில் நிலை நிறுத்தினார். அவர் மறைந்தபின் சூழ்ச்சி, நம்பிக்கை, துரோகம், வஞ்சகம் உள்ளிட்டவற்றை நாம் பார்த்தோம்.
மேலும் ஒற்றைத்தலைமைதான் வேண்டும் என சிலர் செயல்பட்டதே அதிமுக தொடர் தோல்விக்கு காரணம். மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். இருமொழிக் கொள்கையைத்தான் தமிழ்நாடு மக்கள் விரும்புகிறார்கள்” என்றார்.

