• Sun. Mar 16th, 2025

சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ByP.Kavitha Kumar

Feb 24, 2025

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி இந்திய கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடியது. முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா 20 ரன்களிலும், சுப்மன் கில் 46 ரன்களிலும் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.
பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் அடித்தும், அக்சர் படேல் 3 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் விராட் கோலி அதிக ரன்களை குவித்த வீரர் என்கிற அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்கிற சாதனையையும் படைத்தார்.பாகிஸ்தானை வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய கிரிக்கெட் அணிக்கு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “ இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது; மாஸ்டர்கிளாஸ் சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலிக்கு பாராட்டுக்கள்; இதே உத்வேகத்தோடு தொடர்ந்து விளையாடி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்