

ஜெயலலிதாவும், நானும் சேர்ந்து நடிப்பதாக திட்டம் இருந்தது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுகவினர் மாநிலம் முழுவதும் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அத்துடன் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்றார். அப்போது அவருடன் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா ஆகியோர் உடன் இருந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறுகையில், ” ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஜெ.தீபா அழைப்பை ஏற்று வந்தேன். கடந்த 1977-ம் ஆண்டு அவரைப் பார்க்க முதல் முறையாக வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதா சந்தித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது.
அப்போது அவர் பார்க்க விரும்புவதாக கூறினார். அப்போது வந்திருந்தேன். இரண்டாம் முறை ராகவேந்திரா திருமண மண்டபம் திறப்பு விழாவுக்கு அழைக்க வந்தேன். மூன்றாம் முறை மகள் திருமணத்துக்கு அழைக்க வந்தேன். இது நான்காம் முறை அவர் இல்லாவிட்டாலும் அவரது நினைவு மக்கள் மனதில் நிலைத்திருக்கும். அவரது இனிப்பான சுவையான நினைவுகளோடு இருக்கும். அவர் நாமம் வாழ்க” என்று கூறினார்.

