சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் அதிமுக உதவியுடன் பாஜக பெற்ற 4 இடங்களையும் இல்லாமல் செய்து விடும். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்காத திமுக அரசை கலைக்க வேண்டும் என்று கூறியிருக்கும் நிலையில், முதலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டாம் என்று கூறிய மத்திய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பாஜக ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு, அதன் பின்னர் தமிழ்நாட்டிற்கு வரட்டும் என சவால் விட்டார்.
அனைத்து அரசும் உருவாக்க தனியாக அமைச்சகம் உருவாக்கும் நிலையில், பாஜக அரசு மட்டும் தான் பொதுத்துறை நிறுவனங்களை விற்கவும், அடகு வைக்கவும் தனியாக ஒரு அமைச்சத்தையே உருவாக்கியுள்ளதாக சாடினார். மேலும். இதன் மறைமுக நோக்கம் இடஒதுக்கீட்டை ஒழித்து சமூக நீதியை அழிப்பதே ஆகும். அதனால் அகில இந்திய அளவில் தனியார் துறையில் இடஒதுக்கீடை கொண்டு வர வேண்டும் என்ற முன்னெடுப்பை திராவிடர் கழகம் முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார். பெரியார் உலகம், அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டம், வ.உ.சி. பெயரில் விருது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.