• Thu. Mar 30th, 2023

அறப்பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஓபிஎஸ் ஆசிரியர் தின வாழ்த்து

By

Sep 4, 2021 , ,

மாணவ மாணவியரின் ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறப்பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

ஆசிரியராக இருந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை இந்தியாவின் ஆசிரியர் தின நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, ஆசிரியர் தினம் இந்தியாவில் செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கரையாச் செல்வமாம் கல்விச் செல்வத்தை மட்டுமல்லாமல், ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவ, மாணவியருக்கு போதிப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதால், அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர், பெற்றோர், மாணவர் என்ற முக்கோண வடிவத்தில் முதன்மையானவர் ஆசிரியர். ஒரு தாய் தனக்குப் பிறந்த பிள்ளைகளை எப்படி வேறுபடுத்தி பார்ப்பதில்லையோ, அதேபோல் ஆசிரியர் தன்னிடம் பாடம் பயில வரும் பிள்ளைகளை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.

தாய் குழந்தையை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார் என்றால், அந்தக் குழந்தையை பட்டை தீட்டி வைரமாய் ஆக்கி, இந்த உலகத்தையே அவனுக்கு அறிமுகப்படுத்துபவர் ஆசிரியர். கண் போன்ற கல்வியைக் கற்க மாணவர்களிடையே ஆர்வத்தை வளர்ப்பவர்கள் ஆசிரியர்கள்.

இன்று சரித்திரம் படிப்பவனை நாளை சரித்திரம் படைக்க வைக்கும் மாபெரும் சக்தி வாய்ந்தவர் ஆசிரியர். மாணவர்களை தாய் போல் அரவணைத்து, தந்தை போல் கண்டித்து, நல்லறிவு ஊட்டி, சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மிளிரச் செய்யும் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள்.

இப்படி மாணவ, மாணவியரின் ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும், அறப்பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு அவர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *