

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி 5 விக்கெட் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 6வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்கதேச அணிகள் நேற்று மோதின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. வங்காளதேச கேப்டன் ஷாண்டோ 77 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க வீரர் வில் யங் டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் 5 ரன்னிலும், கான்வே 30 ரன்னிலும் வெளியேறினர்.
ரச்சின் ரவீந்திரா மற்றும் டாம் லாதம் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார். அவர் 112 ரன்களில் அவுட் ஆனார். டாம் லாதம் அரைசதம் அடித்த நிலையில் 55 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 240 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

