• Sun. Mar 16th, 2025

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

Byவிஷா

Feb 26, 2025

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ள நிலையில், இந்திய அணிக்கு எதிராக கோஷமிட்ட சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி விளையாடும் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதின. இதில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நம் நாடு வெற்றி பெற்றது. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதன்பிறகு நம் நாடு 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. நம் நாடு அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதனால் நம் நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளநிலையில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர்களை சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் போட்டியின்போது இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்ட குற்றச்சாட்டில் மகாராஷ்டிராவில் 15 வயது சிறுவன் மற்றும் அவனது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள மால்வனில் 15 வயது சிறுவன் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இரவு 9.30 மணியளவில் சிறுவன் நம் நாட்டுக்கு எதிராக கோஷமிட்டதாக சொல்லப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் கண்டித்துள்ளனர். அப்போது சிறுவனின் குடும்பத்தினருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 3 பிரிவுகளில் வழக்கு போலீசார் விரைந்து வந்து 2 தரப்பையும் சமாதானம் செய்தனர். மேலும் சிறுவன் அவனது பெற்றோர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 196 (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 197 (நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதகமாக பேசுதல்) மற்றும் 3 (5) (உள்நோக்கத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாக சேர்ந்து செயல்படுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி 15 வயது சிறுவன் மற்றும் அவனது பெற்றோரை போலீசார் கைது செய்தனர். சிறுவனுக்கு இன்னும் 18 வயது நிரம்பவில்லை. இதனால் அவன் கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான். பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபற்றி மாவட்ட எஸ்பி அகர்வால் கூறுகையில்,‛‛சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் மீது புகார் வந்தது. இருதரப்பினரும் சண்டையிட்டு கொண்டனர். தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர். சிறுவன் கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். அவனது பெற்றோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
முன்னதாக சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினரை கண்டித்து கடந்த 24ம் தேதி மோட்டார் சைக்கிள் பேரணி என்பது நடத்தபட்டது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து மால்வன் நகராட்சி சார்பில் அவர்கள் நடத்தி வந்த பழைய இரும்பு கடை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டது. உரிய அனுமதியின்றி கடை நடத்திய குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. தற்போது கைது செய்யப்பட்ட 3 பேரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவின் மால்வனுக்கு வந்தனர். அவர்களின் சொந்த மாநிலம் உத்தர பிரதேசம். வேலை தேடி மகாராஷ்டிராவுக்கு வந்து மால்வனில் தங்கி கடை நடத்தி வந்த நிலையில் அது இடித்து அகற்றப்பட்டுள்ளது. வெளியேற்ற முடிவு இதுபற்றி முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் மகனும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் எம்எல்ஏவுமான நிலேஷ் ரானே தனது எக்ஸ் பக்கத்தில், ‛ஸ்கிராப் வியாபாரி இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டார். அவரை மாவட்டத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது அவரது கடை அகற்றப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுத்த மால்வன் நகராட்சி மற்றும் காவல்துறைக்கு நன்றி” என்று கூறியுள்ளார்