• Sat. Apr 20th, 2024

காதுகேளாத 500 குழந்தைகளுக்கு நவீன கருவி – சுகாதாரத்துறை அமைச்சர்

காதுகேளாத 500 குழந்தைகளுக்கு நவீன கருவி பொருத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிறவிலேயே காதுகேளாத குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உதவ அரசு முடிவு செய்துள்ளது. 6 வயதுக்கு உட்பட்ட காதுகோளாத 500 குழந்தைகளுக்கு கோக்லியர் நவீன கருவி பொருத்த இருக்கிறோம். இதன் மூலம் கர்நாடகத்தில் காது கேளாதோர் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம். இந்த விஷயத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் 1,939 குழந்தைகள் காதுகேளாத பிரச்சினையுடன் இருப்பதை சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. இவ்வாறான பிரச்சினையுடன் குழந்தைகள் பிறப்பதற்கு, மருந்துகள் உட்கொள்ளுதல், வைரல் தொற்று பாதிப்பு, மூச்சுத்திணறல், கர்ப்பிணிகள் அதிர்ச்சி அடைவது போன்ற பிரச்சினைகள் தான் காரணம் ஆகும்.
இந்த கோக்லியர் கருவியை பயன்படுத்துவதால் குழந்தைகள் கேட்கும் திறனை பெற முடியும். இந்த கருவி காதுகளின் உட்பகுதியில் பொருத்தப்படும். அந்த கருவி மூலம் கேட்கும் திறனை ஏற்படுத்தும் உடலின் உட்பகுதி செயல்பட தொடங்கும். அப்போது ஒலி சிக்னலை மூளைக்கு கொண்டு செல்லும். இந்த காதுகேளாத குழந்தைகளுக்கு அரசு இலசமாக சிகிச்சை வசதிகளை செய்து கொடுக்கிறது. இந்த குழந்தைகளை கண்டறியும் ஆஷா ஊழியர்களுக்கு ரூ.250 வழங்கப்படும். கர்நாடகத்தில் 20 ஆஸ்பத்திரிகள் குறிப்பாக பெங்களூருவில் உள்ள கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரி, பவுரிங் ஆஸ்பத்திரி, பெங்களூரு மருத்துவ கல்லூரி, உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிகளில் இந்த கோக்லியர் கருவி பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும். கர்நாடகத்தில் இதுவரை 62 குழந்தைகளுக்கு இந்த கோக்லியர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 258 குழந்தைகளுக்கு இந்த கருவி பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுதாகர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *