• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

நேற்று பதவி ஏற்று இன்றுதான் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டேன்-அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்..,

Byமுகமதி

May 23, 2026

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு ஜா.முகமது பர்வேஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
இன்று முதன் முதலாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மட்டுமல்லாது அனைத்து துறை அதிகாரிகளிடம் இன்று ரிவ்யூ மீட்டிங் நடத்தினோம். இது ஒரு அறிமுக கூட்டமாக தான் இருந்தது என்றாலும் முக்கியமாக கல்வித்துறை சம்பந்தப்பட்ட விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டன.
வருகிற ஜூன் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. அதற்காக கட்டடங்கள், குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்தும் சரியாக இருக்கின்றனவா என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டேன். மற்ற அதிகாரிகளிடம் அனைத்துத் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களும் அறிய முடிந்தது.

இதுவரை அரசு செயல்பட்ட விதம் இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு முன்பிருந்த அரசு என்ன செய்தது என்பதை விட இனி இப்பொழுது அமைந்திருக்கும் அரசு என்ன செய்யப் போகிறது என்பதை தான் நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். வேலைவாய்ப்புத் துறையில் உள்ள ஆன்லைன் பதிவுகள் வெப்சைடுகள் மிகவும் தாமதமான நிலையில் இருக்கிறது. அவையெல்லாம் இன்னும் இரண்டு நாட்களில் சரி செய்யப்பட்டு விரைவு படுத்தப்படும். படித்து வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உடன் ஐஏஎஸ் அதிகாரிகள் உதவியுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் இருக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறு குறு தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு உரிய பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த அரசு இளைஞர்களுக்கான அரசு. எனவே இளைஞர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் இந்த ஐந்தாண்டு காலங்களில் முழுமையாக நிறைவேற்றுவோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் துறை ஏதும் இல்லை. அதனால் இங்குள்ள இளைஞர்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது அதை மாற்றுவதற்கு இங்கு உண்டான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஊர்களின் குடிதண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து அதிகாரிகளிடம் மற்றும் அது சார்ந்த துறையிலும் பேசி விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவர்களின் கோரிக்கைகள் நிறைய இருக்கின்றன. என்னிடம் கொடுத்தது மட்டுமல்லாது அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக செய்ய வேண்டிய கோரிக்கைகளை உடனடியாக செய்து கொடுக்க ஏற்பாடு. மற்றும் நிரந்தரமாக செய்ய வேண்டிய கோரிக்கைகளுக்கும் அந்தத் துறை சார்ந்த அமைச்சகம் மற்றும் அதிகாரிகளிடம் பேசி அவர்களுக்கு உரியவை செய்து கொடுக்கப்படும். நான் இளவயது அமைச்சராக இருந்தாலும் மாண்புமிகு முதலமைச்சர் என்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து இருக்கிறார். இந்த பணியை செய்வது சவால் என்பதை விட எனது கடமையாகப் பார்க்கிறேன். எதுவாக இருந்தாலும் நமது முதலமைச்சர் இருக்கிறார். மக்களுக்கு இந்த அரசின் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. அவர்களது எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.