
தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 1.5 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் புதிய கட்டிட பணியை தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து திருநீலகண்டேஸ்வரர் கோயில் பாதை உபயதாரர்கள் பேரூராட்சி மன்றத்திற்கு பாதைக்கான பதிவு செய்த பத்திர ஆவணத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களிடம் கொடுத்து அரசுக்கு ஒப்படைக்கின்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முருகன் மற்றும் ஊர் பெரியவர்களும், பொதுமக்களும், திமுக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இது குறித்து எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் ஒரு கோடியே ஐம்பது லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய, வெளி நோயாளிகள் மருத்துவம் பார்க்கக்கூடிய மருத்துவ மனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் காலத்துக்கு ஏற்ற வசதிகள் செய்யப்பட உள்ளது. கழிப்பறையுடன் கூடிய பிரசவ அறை, பிரசவத்திற்கு முன்பு கர்ப்பிணி பெண்களை தயார் செய்யக்கூடிய அறை, மருந்துகள் சேமிப்பு அறை, மருத்துவ கழிவுகள் பாதுகாப்பு அறை, மற்றும் மருந்தகம், ஸ்கேன் அறை, எமர்ஜென்சி வார்டு. வெளிப்புற நோயாளர்கள் காத்திருப்பு அறை, ஆண்கள், பெண்களுக்கான கழிப்பிட வசதி, கருப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனை அறை, மேலும் மருத்துவ நிபுணர்கள் பரிசோதனைக்காக வரும் அறை என துரிதமாக கட்டப்பட்டு வருகிறது.

சட்டமன்றத்தில் துணைக் கேள்வியின் மூலமாக எழுப்பப்பட்டு, தமிழக முதல்வர் அவர்கள் இந்த கட்டிடத்திற்கு நிதியை ஒதுக்கி தந்ததற்கு புதுப்பட்டி வாழும் மக்கள் முதல்வரை வாழ்த்துகிறார்கள். அதேபோல எனது மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அது பிரசவ அறையாக கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த மருத்துவமனைக்கு மருத்துவக் கருவிகள் எனது சொந்த நிதியில் வாங்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவமனைக்கு ஒரு சில வசதிகளை மருத்துவ அலுவலர் கேட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் நேரம் வரும்போது அதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
