சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணாநகரில் உள்ள வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வியப்பூட்டும் யோகா சாதனையை நிகழ்த்தி உலக சாதனை படைத்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு யோகா நிகழ்ச்சியில், பள்ளியைச் சேர்ந்த 28 மாணவர்கள் கண்களைக் கட்டிக்கொண்டு 26 வகையான யோகாசனங்களை துல்லியமாக செய்து அசத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி அறக்கட்டளை நிறுவன தலைவர் பிரீத்தி அறிவுடை நம்பி மற்றும் தாளாளர் நித்தின் அறிவுடைநம்பி தலைமை தாங்கினர். பள்ளி முதல்வர் டாக்டர் அமுதவல்லி முன்னிலை வகித்தார்.
யோகாவின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே எடுத்துரைக்கும் வகையிலும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் கண்களைக் கட்டிய நிலையிலும் மிகுந்த கவனம் மற்றும் ஒழுக்கத்துடன் 26 யோகாசனங்களை தொடர்ந்து செய்து முடித்தது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்களின் இந்த அபார திறமையை நோவா உலக சாதனை நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்தது.

இதனைத் தொடர்ந்து, நோவா உலக சாதனை அமைப்பின் இந்திய இயக்குநர் திலீபன், சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
மாணவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் யோகா மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்திய இந்த உலக சாதனை நிகழ்ச்சி, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.




