

ரேகா குப்தா தலைமையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்புடன் டெல்லி சட்டப்பேரவை இன்று கூடுகிறது.
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். இந்நிலையில் புதிய எம்எல்ஏக்களுடன் டெல்லி எட்டாவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.
புதிய எம்எல்ஏக்கள் காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளநிலையில், சபாநாயகர் தேர்தல் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கிடையில், துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, பாஜக தலைவர் அர்விந்தர் சிங் லவ்லியை தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளார். நாளை துணைநிலை ஆளுநர் சக்சேனா உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26-ம் தேதி, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் காலை 11 மணிக்கு தொடங்கும். அதன் பிறகு துணை சபாநாயகர் தேர்தல் நடைகிறது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் சிஏஜிஅறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்று டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

