• Thu. Apr 25th, 2024

ராஜபாளையத்தில் வெறி கொண்ட தெரு நாய்கள்

Byமகா

Feb 4, 2022

ராஜபாளையத்தில் தெரு நாய்கள் அட்டகாசம்.நாய்கள் கடித்து 8 பேர் மற்றும் 4 மாடுகள் படுகாயம்! அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெரு நாய்கள் பெருகிவிட்டதால் நாய்கள் கடித்து 8 பேர் உள்பட 4 மாடுகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெருநாய்களை கட்டுப்படுத்த கோரி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாய்களை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபாளையத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து விட்டது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன்காரணமாக தெருக்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்பவர்கள் போன்றவைகளை விரட்டி விரட்டி கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் தெரு, தென்காசி சாலை, சஞ்சீவி நாதபுரம் தெரு, செவல்பட்டி தெரு, பஞ்சு மார்க்கெட், டி.பி. மில்ஸ் ரோடு போன்ற பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இந்நிலையில் இன்று காலை பெரியமாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த சிறுவன் முத்து சரவணன் வயது 11 என்ற பள்ளி மாணவனை தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்ததில் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தொடர்ந்து தாமோதரன், நகராட்சி துப்புரவு ஊழியர் கருப்பாயி, அவரது உறவினர் தமிழ்ச்செல்வி உள்பட 8 பேரை தெருநாய்கள் கடித்ததால் படுகாயம் அடைந்தனர். அனைவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ராஜபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனி குரு, காளி ஆகியோர் தலைமையில் துப்புரவு ஊழியர்கள் கட்டைகளுடன் அலைந்து திரிந்து நாய்களை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சில நாய்களை பிடித்து ராஜபாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் நான்கு மாடுகளையும் நாய்கள் கடித்து பாதிப்படைந்து உள்ளதால், பாதிப்படைந்த மாடுகளும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விரைவில் ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *