நாடு முழுவதும் கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் கொரோனா பாதிப்பு பதிவான நிலையில், பல்வேறு மாநிலங்கள் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தது.
தற்போது, பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கேரளாவில் மட்டும் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை.
கடந்த வாரத்தில் புதிய உச்சமாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்தது. இதனால் அம்மாநிலத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனவே, ஞாயிற்றுக்கிழமையான நாளையும் (6ம் தேதி) முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பால், காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் தங்கள் அடையாள அட்டையுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், பொதுமக்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர அனுமதி.
மருந்தகங்கள், ஊடக நிறுவனங்கள், தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் முழு நேரமும் செயல்படும். தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அவசர பயணம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அவசர நிலையை நிரூபிக்கும் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைகள் மட்டுமே கிடைக்கும்.