• Mon. Apr 21st, 2025

கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா.., இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்…

கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக, தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், இடுக்கி மாவட்ட ஆட்சியர் வி. விக்னேஸ்வரி ஆகியோர் தலைமையில் இரு மாநிலங்களின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட மாநிலங்களுக்கு இடையேயான கூட்டம், தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக அலுவலக வளாகத்தில் உள்ள ராஜீவ் காந்தி கலையரங்கில் இன்று மாலை நடைபெற்றது.

அதில், திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு துறைகள் மேற்கொள்ளும் ஏற்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பக்தர்களின் பாதுகாப்பு, வனம் மற்றும் கோவிலின் புனிதத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து பக்தர்களுக்கு சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில், சிதிலமடைந்து வரும் மங்கலதேவி கண்ணகி கோவிலை தொல்பொருள் ஆய்வுத்துறை மூலம் சீரமைப்பு செய்து தர வேண்டியும், பக்தர்களுக்கு உரிய கட்டணத்தில் ஜீப் வசதிகள், கூடுதலாக வாகன வசதிகள், பக்தர்கள் கண்ணகி கோவிலுக்கு வருவதற்கு கேரளா வனத்துறை எவ்விதமான இடையூறுகளும் செய்யக்கூடாது என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பாக செயலாளர் டி.ராஜேகணேசன், பொருளாளர் P.S.M.முருகன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பஞ்சுராஜா, சரவணன், சபரிநாதன், கருப்பு, ஈஸ்வரன், காசிராஜன் மற்றும் மகளிர் அணி சாந்தி, சரண்யா ஆகியோர் தங்களது கோரிக்கையாக இரு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் வைத்தனர்.

கூட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் குடிநீரோ அல்லது பிற உணவுகளோ கோவில் வளாகத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. ஜீப் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மது, அசைவ உணவு போன்றவை கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது.
கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு குமுளி சோதனைச் சாவடிக்கு அருகில் மே 7, 8, 9 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரு மாநில ஆர்.டி.ஓக்களின் தலைமையில் வாகனத்தகுதி ஆய்வு செய்து பாஸ் வழங்கப்படும். தகுதிச் சான்றிதழ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வாகனங்களில் அதிக ஆட்களை ஏற்ற அனுமதிக்கப்பட மாட்டாது.

குமுளி பேருந்து நிலையம், அமலாம்பிகை பள்ளி, கொக்கரகண்டம் ஆகிய இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். சுற்றுச்சூழல் பாதிக்கும் அலங்காரப் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. வெடிகள் மற்றும் வெடிக்கும் பொருட்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. பாதுகாப்பின் ஒரு பகுதியாக மீட்பு வாகனம், அஸ்கா லைட் ஆகிய வசதிகளுடன் கொக்கரகாண்டத்தில் பேரிடர் குறைப்பு பிரிவு செயல்படும். முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவின் சேவையும், ஒரு ஐசியூ ஆம்புலன்ஸ் உட்பட 10 ஆம்புலன்ஸ் வசதியும் மலையின் மேல் ஏற்பாடு செய்யப்படும். 13 இடங்களில் குடிநீர் ஏற்பாடு செய்யப்படும். காலை ஆறு மணி முதல் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஊடகவியலாளர்களுக்கான பாஸை இரு மாநில தகவல் அலுவலர்களும் வழங்குவார்கள். பாஸ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ட்ரோன்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது. இரு மாநில அதிகாரிகளும் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். கூடுதல் கழிப்பறை வசதி செய்யப்படும். மலையாளம் மற்றும் தமிழில் திசை காட்டி பலகைகள் வைக்கப்படும். மலையாளம் மற்றும் தமிழில் அறிவிப்புகள் செய்யப்படும். தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படும் இடம் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் இடுக்கி துணை ஆட்சியர் அனுப் கார்க், கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் ஷைஜு பி ஜேக்கப், காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணு பிரதீப், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் எஸ். ஆனந்த், தேனி டிஎஃப்ஓ ஆர். சமர்தா, பெரியாறு புலிகள் காப்பக உதவி இயக்குனர் ஐ.எஸ். சுரேஷ் பாபு மற்றும் இரு மாநிலங்களின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்..,

கோயிலில் பக்தர்களுக்கு சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும், டிராக்டர்களில் உணவு கொண்டு செல்லப்படும். டிராக்டர்களில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாலை 5.30 மணிக்கு பிறகு கோவில் வளாகத்தில் யாரையும் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்கு முன் பூசாரி உட்பட அனைவரும் மலையிலிருந்து திரும்ப வேண்டும். பக்தர்களிடமிருந்து எந்த தொகையும் வசூலிக்க அனுமதிக்கப்பட மாட்டாது. ஆர்.டி.ஓ நிர்ணயிக்கும் தொகையே வாகனங்களுக்கு பக்தர்களிடமிருந்து வசூலிக்க அனுமதிக்கப்படும்.
கேரளா மற்றும் தமிழ்நாடுக்கு தலா மூன்று பொங்கல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். 18,000 முதல் 20,000 வரை பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் பொங்கல்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் தரிசன நேரம் அதிகரிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். இது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும், வெப்பம் அதிகரித்து வருவதால் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தீயணைப்பு படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் எந்த விதமான கழிவுகளையும் வனத்தில் கொட்டக்கூடாது
என அதிகாரிகள் தெரிவித்தனர்.