• Fri. Dec 13th, 2024

கழுகுமலை அருகே கிராம பஞ்சாயத்தில் ஜெ.ஜெ.எம். திட்டத்தின் கீழ் முறைகேடு.

ByM.maniraj

Aug 6, 2022

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் யூனியனுக்கு உட்பட்ட கே. துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறப்படுவதாவது- தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் யூனியன் கே.துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். பஞ்சாயத்து துணை தலைவராக அமுதா என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் ஜெ.ஜெ.எம். திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பலமுறை முறைகேடு நடந்துள்ளது.‌பொதுமக்கள் பலர் என்னிடம் முறையிடுகின்றனர். இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் பலனில்லை. தற்போது பஞ்சாயத்து சிறப்பு கூட்டம் போட சொன்னார்கள். ஆனால் ஜெ.ஜெ.எம் திட்டத்தில் உள்ள முறைகேட்டிற்கு தீர்வு தெரியாமல் எதுவும் செய்ய இயலாது என கூறினேன். ஆனால் துணை தலைவர் மற்றும் பஞ்சாயத்து கிளார்க் ஆகியோர் என் அனுமதி இல்லாமல் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்து கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இவர்கள் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்னை நிர்வாகம் செய்ய விடாமல் இடையூறு செய்கின்றனர். எனவே மேற்படி‌ இடையூறு செய்யும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். ‌இது சம்பந்தமாக பொதுமக்களை திரட்டி போராட தயாராக உள்ளேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


இது குறித்து துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவரான மல்லிகா கூறியதாவது. கயத்தார் யூனியன் கே. துரைச்சாமிபுரம் பஞ்சாயத்திற்கு வர வேண்டிய நிதியானது தற்போது பல ஆண்டுகளாக அருகில் உள்ள கே. வெங்கடேஸ்வரபுரம் கிராம பஞ்சாயத்திற்கு சென்று விடுகிறது. கேட்டால் மக்கள் தொகை கணக்கீட்டின்படி நிதி வழங்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மக்கள் தொகை கணக்கீட்டின்படி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் கிராம பஞ்சாயத்தில் தான் அதிகளவில் உள்ளனர். ஆனால் நிதியோ தவறுதலாக மாறி செல்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக பஞ்சாயத்து நிர்வாகத்தை நடத்த முடியவில்லை.

இந்நிலையில் துணை தலைவர் மற்றும் கிளார்க் என்னை ஒதுக்கிவிட்டு தன்னிச்சையாக செயல்பட்டு எனை கேட்காமல் கூட்டம் நடத்துவது போல் நடத்தி தீர்மானம் நிறைவேற்றுவது மற்றும் ஜெ.ஜெ. எம். திட்டத்தில் மோசடி உள்ளிட்ட பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே அரசு முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினார்.