இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து
அமெரிக்காவின் தலையீடு குறித்த அச்சம் மேற்கு ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு ஆசியாவில் ஆயுத மோதலில் அமெரிக்கா நேரடியாகப் பங்கேற்கும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலும் ஈரானும் பரஸ்பர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. நேற்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவ மையம் (தெற்கு இஸ்ரேலின் மிகப்பெரிய மருத்துவமனை) சேதமடைந்தது.
இந்தத் தாக்குதலில் 32 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனியை உயிருடன் விடமாட்டோம் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் எச்சரிக்கை விடுத்தார். மருத்துவமனைக்கு அருகில்தான் இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறை செயல்படுகிறது என்று ஈரான் கூறியது. அதேபோல் நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானின் அராக்கில் உள்ள கோண்டப் அணுமின் நிலையத்தின் கனநீர் உலை சேதமடைந்தது.
இதற்கிடையில், ஈரானைத் தாக்குவதற்கான திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடுவதற்கான வாய்ப்பாக இறுதி முடிவை தாமதப்படுத்துவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக அமெரிக்கா இராணுவத் தலையீடு செய்தால், அமெரிக்காவின் ‘குற்றவியல் ஆட்சி’ மற்றும் அதன் ‘முட்டாள்’ அதிபர் பின்விளைவுகளை சந்திப்பார்கள் என்று ஈரானின் கார்டியன் கவுன்சில் எச்சரித்துள்ளது.