தென்னிந்தியாவில் பருவமழை தீவிரமடைந்து, கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வட இந்தியா கடும் வெப்ப அலையால் கொழுந்துவிட்டு எரிகிறது.
ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்ப அலை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் ஆகும். 2016 இல், ராஜஸ்தானின் பலோடி நகரில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. திங்களன்று பஞ்சாபின் பதிண்டாவில் 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் வெப்ப அலையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 40,000 க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையை வெப்ப அலை பாதித்தது.
தென் இந்தியாவில் பருவமழை தீவிரம்:
அதேநேரம், தென்னிந்தியாவில் பருவமழை வலுப்பெற்று வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கம்:
புவி வெப்பமயமாதல் மற்றும் எல் நினோ ஆகியவை காலநிலையை தலைகீழாக மாற்றுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஐபிஏ குளோபல் மற்றும் ஏசி இந்தியா இணைந்து நடத்திய ஆய்வில், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய நகரங்களில் காலநிலை மாற்றம் பெரிய அளவில் வெளிப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வெப்ப அலைகள் மிகவும் தீவிரமான மழைக்கும் வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
