அகமதாபாத் விமான விபத்தில் உயிர்பிழைத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஸ்வாஸ் குமார் ரமேஷ்- ஐ பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஒரே நபராகிய 40 வயது பிரிட்டிஷ்-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் தான் எவ்வாறு உயிர் தப்பினேன் என்பதை இன்னும் முழுமையாக நினைவுகூர முடியவில்லை என்று தெரிவித்தார்.
விஸ்வாஸ் குமார் ரமேஷ் தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில், “நான் அதிலிருந்து எப்படி உயிருடன் வெளியே வந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு கணம், நான் இறக்கப் போகிறேன் என்று நினைத்தேன், ஆனால் நான் கண்களைத் திறந்தபோது உயிருடன் இருப்பதை உணர்ந்தேன்.

விமானத்தில் அவசரகால வாயிலுக்கு அருகில் உள்ள 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்தேன். விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குப் பிறகு, விமானத்திற்கு ஏதோ கோளாறு நடந்தது என்று அனைவரும் உணர்ந்தனர். அப்போது பச்சை மற்றும் வெள்ளை நிற விளக்குகள் எரிந்தன. விமானிகள் விமானத்தை உயர்த்த முயன்றனர், ஆனால் அது முழு வேகத்தில் சென்று கட்டிடத்தில் மோதியது,”
விமானம் மோதியவுடன் அவசரகால வாயில் வெளியே தூக்கி எறியப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். “நான் விடுதியின் தரைத்தளத்திற்கு அருகில் விழுந்தேன். அங்கு சற்று இடம் இருந்தது. நான் சீட் பெல்ட்டை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினேன்.

கட்டிடத்தின் சுவர் எதிர் பக்கத்தில் இருந்தது, அந்த வழியாக யாரும் வெளியே வந்திருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். நொடிகளில் தீ பரவத் தொடங்கியது. என் கையில் தீக்காயம் ஏற்பட்டது. என் கண் முன்னால் இரண்டு விமானப் பணிப்பெண்கள் இறந்தனர்,” என்று விஸ்வாஸ் தெரிவித்தார்.
இன்று காலை மருத்துவமனைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, விஸ்வாஸ் குமாரை நேரடியாக சந்தித்து விபத்து குறித்து விசாரித்தார். பின்பு விபத்து நடந்த இடங்களை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டார்.