அவளே வேண்டுமென,
சுற்றம் சூழ கரம் பற்றினான்,
குண்டு மணி தங்கம் குறையாமல்!
அன்றிலிருந்து
அவனது கால்களில்
அவளது பயணம்.
இனிய தேனீருடன்
பொழுது புலர்ந்தது
கசப்பாக.
வட்டம் அழகானது
யார் சொன்னார்கள்?
இட்லி கொப்பறை,
தோசைகல்,
இடியாப்ப உழக்,
வட சட்டி
இப்படியான வளையத்தில்
சிக்குண்டு கிடக்கிறது
அவளது வாழ்வு.
குக்கரில் பதனமாய்
எடுத்துவிடப்படும் பிரஷ்ஷரில்
ஆவியாகின
அவளது கனவுகள்.
நறுக்கி வைக்கப்பட்ட
காய்கறிகளில்
மழுங்கடிப்பட்டது
அவளது அறிவு.
கொதிக்கின்ற குழம்பில்
வெந்துகொண்டிருக்கிறது
அவளது திறன்கள்.
அடுக்கு டிபன்பாக்ஸில்
அமுக்கி வைக்கப்பட்ட உணவவாக
அமுங்கி கிடக்கிறது
அவளது உலகம்.
அவளின் அழகை
ரசமாய் பருகி
அறிவை மண்டியென
கிடப்பில் போட்டான்.
உணவை பரிமாறச்சொன்னவன்
அவளின்
உணர்வை பகிர்ந்து கொண்டானா?
அவனால் உண்டான ,
காயங்கள்
அவளுக்குள் ஊறிக்கிடக்கிடக்கிறது
ஊறுகாய்யாய்
அவனுக்காய்
உப்பி வடிந்த வயிற்றுச் சுருக்கங்கள்
விகாரமென விவரித்தான்
விரும்பியவன்.
உடலோடு வாழ்ந்த
அவனது புரிதலற்ற சொற்பொழிவுகள்
பழக்கமாயிருந்தது
அவளது செவிக்கு.
அவளால்
அவனது துணிகளை மட்டுமே
வெளுக்க முடிந்தது.

க.பாண்டிச்செல்வி