• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேச்சு..,

Byமுகமதி

Apr 26, 2026

புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில், 140 ஆண்டுகள் பழமையான தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு தற்போது ரூ. 15 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடத்தைத் திறந்து வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பேசியது,

நல்ல மனிதர்கள் இருக்கும் இடம்தான் நல்ல இடமாக இருக்கும். வழக்காடு மன்றங்கள் என நீதிமன்றங்களை அழைப்பதில் எனக்கொரு ஒவ்வாமை இருக்கிறது. அறம் கூறும் அரங்கங்கள் என நீதிமன்றங்களை அழைக்க வேண்டும்.

நம்முன் வரும் வழக்குகளை ஒரு கருத்துடன் அணுகாமல், நடுநிலையுடன் பார்க்க வேண்டும். சாதாரண மனிதனுக்கும் மேலாக அந்த வாதங்களை கவனிக்க வேண்டும்.

நீதிபதிகள், அரசியல்வாதிகள் என மக்களுக்கான பொறுப்பில் இருக்கும் எல்லோரும் சரியாக முறை செய்யவில்லை என்றால், தானே கெடும் என்பதாகத்தான் முடியும்.

அதேபோல, வந்த பாதையை யாரும் மறக்கக் கூடாது. அதை மறந்த சமுதாயம் அழிந்துவிடும். மற்றவர்களின் பிடிக்குள் சென்றுவிடும். எப்படி இருந்த நாம் எப்படி வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும். இறந்த காலமும், நிகழ்காலமும் தான் எதிர்காலத்தைக் காட்டும்.

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகக் கட்டடத்தை சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்துடன் இங்கே ஒப்பிட்டார்கள். நான் அதற்கும் மேலே, உச்ச நீதிமன்றக் கட்டடத்துடன் ஒப்பிட விரும்புகிறேன். இந்தக் கட்டட அழகுக்கு மேலும் மெருகூட்டுவது வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதிகளின் கைகளில்தான் உள்ளது என்றார் சுந்தரேஷ்.

விழாவுக்குத் தலைமை வகித்த, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பேசியது,

வழக்குரைஞர்களின் தொழில் நடத்தும் இன்னொரு வீடுதான் நீதிமன்றங்கள். பாரம்பரியமான சின்னமாக விளங்கும் இதுபோன்ற கட்டடங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்பட வேண்டும். நம்மை நாடி வரும் வழக்காடிகளுக்கான விரைவான நீதியைப் பெற்றுத் தர வேண்டும். அதற்காக நீதித்துறை அலுவலர்களும், வழக்குரைஞர்களும் தங்களின் பணிகளை செம்மையாகச் செய்ய வேண்டும் என்றார் தர்மாதிகாரி.

விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் பேசியது

தொன்மையான இக்கட்டத்தில்தான் நீதிமன்ற வளாகம் இருக்க வேண்டும் என்ற பெரும்பாலானோரின் கருத்துப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மூத்த வழக்குரைஞர் என்.ஆர். சந்திரன் மற்றும் நானும் வாதாடினோம்.

அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர், பிற அரசு அலுவலகங்களை இவ்வளாகத்தில் இருந்து இடம் மாற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

வருவாய்த் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலங்கள் மாற்றப்பட்டன. பழுதடைந்த கட்டடப் பகுதிகளைப் புதுப்பிக்க எடுக்கப்பட்ட முயற்சியில் அமைச்சர் எஸ். ரகுபதியும் பங்களித்தார். ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏறத்தாழ பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளுக்காக ரூ. 6 கோடி மதிப்பில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை நீதித்துறை கண்டிருக்கும் இந்த வேளையில், வழக்குரைஞர்களும் நீதித்துறை அலுவலர்களும் மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவதில்தான் இம்மாற்றங்களின் பயன் முழுமையடைகிறது. அதற்கு
செம்மையானதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும்.

ஏராளமான இளம் வழக்குரைஞர்கள் இப்போது முதன்மையான தொழிலாகக் கொண்டு நீதித்துறைக்குள் வந்திருக்கிறார்கள். எல்லாத் தரப்பிலும், துறையிலும் திறமை பெற்றிருந்தால்தான் சமுதாயத்தின் சிற்பிகளாக வழக்குரைஞர்கள் ஆக முடியும். அப்போதுதான் ஒளிமயமான புகழும், அந்தஸ்தும் தேடிவரும் என்றார் சுரேஷ்குமார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. அருள்முருகன் பேசுகையில் பழைமையான இக்கட்டடத்தைப் புதுப்பித்தலில் முழு முயற்சி எடுத்து மேற்கொண்ட மண்ணின் மைந்தர் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் பணி மிக முக்கியமானது எனக் குறிப்பி்ட்டார்.

விழாவில், மாவட்ட நீதிபதி நிலையிலான மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தீர்ப்பாயம் மற்றும் திருமயம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டன.

முன்னதாக, மாவட்ட முதன்மை நீதிபதி க. பூரண ஜெய ஆனந்த் வரவேற்றார். முடிவில், புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவர் கே.எஸ். பால்பாண்டியன் நன்றி கூறினார்.