• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கடும் வெயில் காரணமாக பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் வேதனை..,

ByK Kaliraj

Apr 26, 2026

சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆணைகூட்டம் , வெற்றிலை யூரணி, சுப்ரமணியபுரம்,மேல ஒட்டம்பட்டி, பேர்நாயக்கன்பட்டி கொண்டையாபுரம், உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் சீனி அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய் ,தடியங்காய், தக்காளி, வெங்காயம், உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

கிணற்றில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி பாசனம் நடைபெற்று வருகிறது. பயிரிடப்பட்டு 50 நாட்கள் ஆகிய நிலையில் காய்கள் வரும் பருவத்தில் கடும் வெயில் காரணமாக செடிகள் முழுமையாக கருகி விட்டன. விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தெற்கு ஆணை கூட்டம் விவசாயி வெங்கடேஷ் குமார் கூறியது
காய்கறி பயிர்கள் பயிரிடுவதால் தினந்தோறும் வருமானம் கிடைக்கிறது இதனால் இப்பகுதியில் தொடர்ந்து காய்கறி பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். கண்மாய்கள், ஊரணிகள், முழுமையாக வற்றி விட்டன. இருப்பினும் கிணறுகளில் போதுமான தண்ணீர் இருப்பதால் அதனை பயன்படுத்தி காய்கறி பயிர்களை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஒரு முறை செடிகளுக்கு தண்ணீர் விட்டால் போதும் ஆனால் தற்போது கோடை காலமாக இருப்பதால் தினமும் பயிர்களுக்கு இரண்டு முறை தண்ணீர் விடப்படுகிறது.

இதனால் கூலி இரண்டு மடங்காக கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.அப்படி இருந்தும் விவசாய நிலங்கள் அதிக சூடு காரணமாக பயிர்கள் வளர்ச்சி அடையாமல் இருந்தது. தற்போது காய் வரும் நிலையில் முழுமையாக செடிகள் கருகி விட்டன. செடிகளை காப்பாற்ற முடியாமல் வேதனை அடைந்துள்ளோம் ஆகையால் இதற்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறினார்.