

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. மாவட்டத்தில் அதிகபட்சமாக 110 மில்லி மீட்டர் மழை பதிவு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை லேசான சாரல் மழை காணப்பட்டது. இதனை அடுத்து இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது இதன் காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால் ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக களியல் பகுதியில் 110 மில்லி மீட்டர் மழையும், குழித்துறையில் 104 மில்லிமீட்டர், மை தாடியில் 80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து உள்ளது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
