• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ஆலங்குடியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு-பொதுமக்கள் சாலை மறியல்..,

Byமுகமதி

Jun 13, 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் அதை ஒட்டி உள்ள கல்லாலங்குடி ஊராட்சியில் உள்ள நெட்டூத்துக்கரை, கலிபுல்லா நகர், கல்லுக்குண்டுக் கரை ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. சுமார் மூன்று தலைமுறைகளாக அந்தப் பகுதியில் மக்கள் குடியேறி வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் குளத்துப் புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து அதற்கான ஆணையையும் பெற்றிருக்கிறார். இதுகுறித்து வருவாய்த் துறையினர் அந்த நிலங்களை அளக்க முயற்சித்த போது இதற்கு முன்பு சில முறை பொதுமக்கள் வெகுண்டு எழுந்து அளக்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள். அதனால் அளக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவைப் பெற்ற நபர் வலியுறுத்தியதால் இன்று காவல்துறை உதவியுடன் வருவாய்த்துறையினர் அந்தப் பகுதியை அளவீடு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது குறித்து அறிந்த அந்தப் பகுதி மக்கள் இன்று ஆலங்குடி பட்டுக்கோட்டை சாலையில் ஆண்களும் பெண்களும் என சாலை மறியல் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை பேராவூரணி கீரமங்கலம் கொத்தமங்கலம் வடகாடு ஆகிய ஊர்களில் இருந்து வந்த பேருந்துகள் கல்லாலங்குடியில் இருந்து கலிபுல்லா நகர், ஆலங்குடி பேருந்து நிலையம் வடகாடு முகம் வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்பட்டது. கடும் வெயிலிலும் சாலை மறியல் செய்தவர்கள் அந்த இடத்திலிருந்து அகலவில்லை.

அதனால் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ் தலைமையிலான வருவாய்த்துறையினரும் போலீசாரும் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அடுத்த வாய்தா அல்லது நீதிமன்ற உத்தரவு எப்படி வருகிறது என்று பார்த்துக் கொண்டு அதன் பிறகு நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று சாலை மறியல் செய்தவர்களிடம் சமாதானம் பேசி அதிகாரிகள் அனுப்பி விட்டு சென்றனர். இப்பகுதியில் நடைபெற்ற சாலை மறியலால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நெட்டூத்துக்கரை குளமாக இருந்த போதிலும் வயல் காடுகள் எல்லாம் கட்டடங்களாக மாறிவிட்டன.

அதேபோல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குளத்து பகுதியில் வீடுகள் கட்டிக் கொண்டு தற்போது பெரிய மாளிகை வீடுகளாகவும் தொழில் கூடங்கள் ஆகவும் மாறி இருக்கும் நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றுகிறோம் என்று வருவாய் துறையினர் சொன்னதால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்பது பலராலும் உற்று நோக்கப்படுகிறது.