• Mon. Mar 17th, 2025

அதிமுக தலைமையில் சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையும் – எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

ByP.Kavitha Kumar

Feb 24, 2025

அதிமுக தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், “மக்களால் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன் தவவாழ்வால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இன்றும், என்றும் குடியிருக்கும் உன்னதத் தாய், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு வளம்பெறும் வகையிலான தனது மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் மக்களால் ‘அம்மா’ என்று அன்புடன் அழைக்கப்பெறும் நம் ஒப்பற்றத் தலைவி, ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளில், அவரின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.

‘எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் @AIADMKOfficial மக்களுக்காகவே இயங்கும்’ என்று அவர் சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் அவரின் பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம் ” என்று பதிவிட்டுள்ளார்.