• Fri. Mar 29th, 2024

கூடலூர் கல்வி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

கூடலூர் கல்வி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வண்டி பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய ‌நடுநிலைப்பள்ளி மாணவி டியானி அருண்குமார் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
கூடலூர் ஜி.டி.எம்.ஒ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் பந்தலூர் தாலுகாக்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மூன்று பிரிவுகளாக நடந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.எஸ்.பி. மகேஷ் குமார் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். வெற்றி பெற்ற மாணவர்கள் தொடர் பயிற்சிகள் மூலம் தங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்க வேண்டும் என்றும், தோல்வியுற்ற மாணவர்கள் தவறாமல் வெற்றியை நோக்கி விடாமுயற்சியுடன் பயணப்பட வேண்டும் என்றும் பேசினார். மாணவர்கள் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதால் தங்கள் கவனத்தைச் சிதற விடாமல் நல்ல ஒழுக்கத்தை கடைபிடிக்கவும் , சிறப்பாக கல்வி கற்கவும் இயலும் என்றும் குறிப்பிட்டார். இப்போட்டிகளில் தனியார் செஸ் அகாடமியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அரசு பள்ளி மாணவி டியானி அருண்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டத்தை வென்ற டியானியை பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
கடந்த மாதம் தான் டியாணி இப்பள்ளியில் சேர்ந்ததாகவும் ,ஏற்கனவே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளதாகவும், மாநில அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நீலகிரி மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட மாணவி தற்பொழுது எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தலைமை ஆசிரியை சரஸ்வதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *