உலகின் முதல் சிவாலயம் என அழைக்கப்படும் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பழமையான கோவில் என்றும், உலகில் தோன்றிய முதல் சிவாலயம் என்றும் கூறப்படுகிறது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு காலை 9 மணிக்கு கோவிலின் தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்களுடன் கொடியேற்றப்பட்டு சுவாமி – அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பத்து நாட்கள் காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் சுற்றி வரும் வீதியுலா புறப்பாடு நடைபெறும். இந்நிலையில், சித்திரை திருவிழாவின் 10ம் நாளான மே 5ம் தேதி காலையில் மங்கைப்பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பதும், மாலை தேரோட்டமும் சிறப்பாக நடைபெற உள்ளது.