• Fri. Apr 19th, 2024

எல்லா ஜாதிக்காரனும் அர்ச்சகரா?… கோர்ட்டில் கொந்தளிக்கும் சிவாச்சாரியார்கள்!

all caste archakar case

கோவில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் நியமனம் செய்ய தடை விதிக்க கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சர்கர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட ஊழியர்கள் நியமனம் தொடர்பாக கடந்த ஆண்டு இந்து சமய அறநிலைய சட்டத்தில் விதிகள் கொண்டு வரப்பட்டன.

அதன்படி, குழு அமைக்கப்பட்டு, ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக கோவில்கள் சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.

High court

இந்த விளம்பரங்களை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் முத்துகுமார், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அர்ச்சகர் நியமன விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், மூன்று ஆண்டு குரு குல பயிற்சி முடித்து அர்ச்சகர்களாக உள்ளவர்களை விலக்கி வைக்கும் நோக்கத்தில், ஓராண்டு பட்டய சான்று பெற்றவர்களை, ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்களாக நியமிப்பதாக குற்றம் சாட்டி, அர்ச்சகர் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலைய துறை ஊழியர்கள் பணி விதிகளை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் முத்துகுமார் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அர்ச்சகர்களை நியமிக்க கோவில் பரம்பரை அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால், ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்களை தேர்வு செய்வதற்கும், நியமிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு செப்டம்பர் 1ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கையும் அத்துடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை செப்டர்ம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *