• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கண்ணீர் வடிக்கும் ‘தோப்பறை’ தொழிலாளர்கள்..,

ByKalamegam Viswanathan

Apr 27, 2026

ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட தோப்பறைக் கொண்டு தண்ணீர் பீச்சி அடிக்கும் அழகர் திருவிழா தவிர்க்க இயலாதது.‌ ஆனாலும் இதனை உருவாக்கும் தொழிலாளர்களின் வாழ்வியலோ இப்போதும் கண்ணீரும் கம்பலையுமாய் தான் இருக்கிறது. இந்தியா விடுதலை பெற்ற நாளில் இருந்து கோரிக்கை விடுத்தும் எந்த அரசும் கவனம் கொடுக்கவில்லை எனக் குமுறுகிறார்கள். அது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒருபுறம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சார்ந்த திருவிழா. மற்றொருபுறம் அழகர் மலை கள்ளழகர் திருவிழா. இந்த இரண்டு விழாக்களையும் இணைத்து நடத்திய பெருமை மதுரையை ஆண்ட விஜய நகர பேரரசின் வழிவந்த திருமலை நாயக்கரையே சாரும்.

குறிப்பாக அழகர் திருவிழாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுவது அழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களின் ‘தோப்பறை’ தண்ணீர் பீச்சுதல். ஆட்டு தோலால் செய்யப்பட்ட இந்த தோப்பறை அழகர் திருவிழாவின்போது மதுரை கீழமாசி வீதி தேர்முட்டி அருகே அதனை உருவாக்கித் தரும் கலைஞர்களால் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் குடும்பத்தோடு இந்த பகுதியிலேயே உண்டு உறங்கி விற்பனை செய்து விட்டு மீண்டும் ஊர் திரும்புகிறார்கள் தோப்பறை கலைஞர்கள்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் சுமார் 350 குடும்பத்திற்கும் மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனாட்சி என்ற பெண் கூறுகையில், ‘நாங்கள் வசிக்கும் காரியாபட்டி பகுதியில் தோப்பறை உருவாக்குவதற்கான போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. இதற்காக திண்டுக்கல் சென்று அங்குள்ள பேகம்பூர் பகுதியில் ஆட்டு தோல்களை சுத்தம் செய்து வருகிறோம். ஒரு தோலுக்கு ரூ.400 வரை செலவாகிறது. ஆனால் வந்து எங்களிடம் வாங்க வருகின்ற வாடிக்கையாளர்கள் எங்கள் சிரமத்தை புரிந்து கொள்வதில்லை’ என்கிறார். தொடர்ந்து பேசிய கண்ணன், ‘தோப்பறை தொழிலை நாங்கள் பாரம்பரியமாக செய்து வருகிறோம். எனக்கு தெரிந்து நான் நான்காவது தலைமுறை. முதலில் எங்கள் ஊரிலேயே ஓரளவிற்கு இதனை உருவாக்குவதற்கான வசதிகள் இருந்தன. ஆனால் இப்போது இல்லை. இதற்காக ஒவ்வொரு முறையும் நாங்கள் திண்டுக்கல் சென்று பாடம் பண்ணி வாங்கி வர வேண்டியது உள்ளது. ரூ.400லிருந்து ரூ.450 வரை எங்களுக்கு செலவாகிறது. இதனை வாடிக்கையாளர்கள் பேரம் பேசாமல் எங்களிடம் வாங்க வேண்டுகிறோம். கீழமாசி வீதி பகுதியில் எங்களுக்கு இட ஒதுக்கி கொடுத்துள்ளார்கள். ஆனால் இந்த குறுகிய சந்திலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிகம் இருக்கின்ற காரணத்தால். அதனை கோவில் நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் பத்து நாட்களுக்கு மட்டும் சற்று ஒழுங்குபடுத்தி கொடுக்க வேண்டுகிறோம். தோப்பறை செய்யும் வேலைகளை தை மாதமே நாங்கள் தொடங்கி விடுவோம். இதனை உருவாக்குவதற்கு மூன்று மாதங்கள் என்பது கணக்கு. ஆட்டு தோலை சரியாக உணர்த்தி செம்மைப்படுத்தி கொண்டு வருவதற்கு குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு மேல் ஆகும். இதிலிருந்து லாபம் கிடைத்தால் நல்லது. ஆனால் எங்களைப் பொறுத்தவரை இதனை தெய்வ காரியமாக பார்க்கிறோம்’ என்கிறார்.

ஆட்டுத்தோல்களை வாங்கி தண்ணீரில் சுண்ணாம்புக்கல் சேர்த்து ஊற வைக்கிறார்கள். பிறகு அதில் உள்ள ரோமங்களை எல்லாம் நீக்கிவிட்டு, நான்கு நாள் ஊற வைத்த பிறகு, மீண்டும் தண்ணீரில் அலசி கத்தியை வைத்து சுரண்டி அதன் பிறகு ஆவாரம்பூ செடியை கொண்டு வந்து தண்ணீரில் தோலோடு ஊற வைக்கின்றனர். அதன் பிறகு கருவப்பட்டை, கடுக்காய் ஆகியவற்றையும் சேர்த்து தண்ணீரோடு ஊற வைக்க வேண்டும். காய வைத்த பிறகு மீண்டும் தண்ணீரில் நனைக்க வேண்டும். காலால் தேய்த்து அயன் செய்த மாதிரி விறைப்பாக்க வேண்டும்.
மேற்கண்ட நடைமுறைகளை செய்த பிறகு தான் ஆட்டு தோல் தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றாற் போன்று உருவாக்க முடியும். பாரம்பரியமாய் இந்த தொழில் இவர்களுக்கு தெரிந்திருப்பதால் ஆட்டின் வலது கால் துளையில்தான் தண்ணீர் பீய்ச்சும் அமைப்பை உருவாக்க முடியும். பிறருக்கு இது குறித்து எதுவும் தெரியாது. இடது கால் துளையை தோள்பட்டையில் தொங்குவதற்கான அமைப்பாக மாற்றி தோப்பறையாக உருவாக்கி விடுகிறார்கள். இது மிகவும் நுட்பமான வேலைப்பாடாகும். தமிழகத்தில் வேறு எங்கும் இதுபோன்று உருவாக்கிக் கொடுக்கின்ற நபர்களோ கலைஞர்களோ கிடையாது.

தோப்பறைக் கலைஞர் குருநாதர் வெள்ளைச்சாமி கூறுகையில், தோப்பறை விற்பனையை நான் கடந்த 45 ஆண்டுகளாக செய்து வருகிறேன். இதே பணியை எனது முன்னோர்கள் செய்தனர். ஆட்டுத்தோலை சுத்தம் செய்து பராமரிக்க தண்ணீர் தொட்டி அமைத்து தரவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் யாரும் அது குறித்து அக்கறை கொள்ள மறுக்கிறார்கள். எங்கள் மாவட்டத்தில்தான் காமராஜரும் எம்ஜிஆரும் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோன்று தற்போது அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு அவரது அப்பா தங்கப்பாண்டியன் எல்லோரும் இங்கிருந்து தான் தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத்திற்கு சென்றனர். பல்வேறு அமைச்சர்களையும் முதல்வர்களையும் தந்த மண் விருதுநகர் மாவட்டம். ஆனால் எங்கள் கோரிக்கை மட்டும் கேட்பாராற்று கிடக்கிறது. இதில் எங்களுக்கு லாபம் கிடைப்பது என்பது மிக மிக குறைந்தபட்சம்தான். அழகுமலையானுக்கு செய்யும் தொண்டாக கருதி தான் இந்த பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதனை உருவாக்க ஆகும் கூலி அனைத்தையும் பக்தர்களின் தலையில் கட்ட வேண்டியதாக உள்ளது. ஆகையால் தமிழக அரசு இந்த முறையாவது எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதலாக இந்த தொழிலுக்கு இதுவரை எந்த அரசாங்கமும் தேவையானதை செய்து கொடுக்கவில்லை. தொட்டி மற்றும் தண்ணீர் வசதி இல்லாமல் திண்டுக்கல்லில் உள்ள பேகம்பூர் சென்று அங்குள்ள தோல் தொழிற்சாலைகளிடம் இதனை செம்மை செய்து கொண்டு வருகிறோம். அதன் பிறகு அங்கிருந்து மதுரைக்கு கொண்டு வரும்போது அதனை தைத்துக் கொடுப்பதற்கான கூலி என செலவுகள் மிக அதிகம். தோலின் அளவு தன்மையைப் பொறுத்து அதன் விலை ரூபாய் 400 இல் இருந்து ரூ.500, ரூ.600 வரை ஆகும். சில தோல்கள் சிறியதாக இருக்கும் அவற்றால் எங்களுக்கு எந்தவித லாபமும் இருக்காது. ஆனால் அதற்காக வீணாக்காமல் வருகின்ற விலைக்கு விற்பனை செய்து விடுவோம். திருவிழாவுக்கு தேவையான மாலையோ சந்தனமோ மற்ற சில பொருட்களோ வேறு எங்கும் வாங்கிவிட முடியும் ஆனால் இந்த தோப்பறை மதுரையில் மட்டும் தான் கிடைக்கும்’ என்கிறார்.

அவனியாபுரத்தைச் சேர்ந்த அழகர் பக்தர் ராஜேந்திரன் கூறுகையில், எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக அழகருக்கு தண்ணீர் பீச்சுகிறோம். இந்த தோப்பறை இங்கு தான் கிடைக்கும். தமிழகத்தில் வேறு எங்கும் வாங்க முடியாது. எதிர்சேவை அன்று தொடங்கும் எங்களது ஆன்மீகப் பணி, தல்லாகுளம் பெருமாள் கோயில், ராமராயர் மண்டகப்படி, வண்டியூர் பெருமாள் கோயில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் எல்லாம் தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடன் செலுத்திய பிறகு மீண்டும் மேளதாளத்துடன் அவனியாபுரம் சென்று எங்கள் விரதத்தை முடிப்போம். ஒருமுறை வாங்கிய தோப்பறை அந்த ஆண்டு ஆற்றில் கழித்து விடுவோம். பிறகு மீண்டும் அடுத்த முறை புதிய தோப்பறை தான் வாங்க வேண்டும். என் குடும்பத்திலேயே ஆறேழு தலைமுறையாக இதனை மேற்கொண்டு வருகிறோம்’ என்கிறார்.

ஒவ்வொரு முறை அழகர் திருவிழாவின் போது ஈடிவி பாரத் ஊடகத்திற்காக தோப்பறை கலைஞர்கள் குறித்து சிறப்பு செய்தியினை வெளியிட்டு வருகிறோம். அவர்களும் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் இதுவரை எந்த அரசாங்கமும் இதனை செவிமடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. இந்த முறையாவது புதிய அரசு தோப்பறை கலைஞர்களின் கோரிக்கைகளை ஏற்று அதனை செய்து தர வேண்டும் என்பதே இந்த சிறப்பு தொகுப்பின் நோக்கம்.