தமிழக அரசின் பள்ளி பாடத்திட்டத்தில் அழகுக் கலையையும் சிறப்பு பாடமாக சேர்க்க வேண்டும் எனவும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஏராளமானோர் அழகு கலையில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசு வட்டியில்லா கடன் வழங்கி தொழில் துவங்க உதவ வேண்டும் எனவும் அழகு கலை பெண்கள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்ட அழகு கலை பெண்கள் அமைப்பின் ஆண்டு விழா எளிமையாக நாகர்கோயில் அருகே மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் நடைபெற்றது. அவ் அமைப்பின் நிர்வாகிகள் மனவளர்ச்சி குன்றியோருடன் கேக் வெட்டியும் மதிய உணவு வழங்கியும் கொண்டாடினர். அதன் பின்பு அவ்வமைப்பின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெகுவிமரிசையாக நடத்தப்படும் தங்கள் அமைப்பின் விழா கொரோனா விவகாரத்தால் பிறருக்கு உதவும் வகையிலான நிகழ்ச்சியாக மாற்றி அமைத்ததாகவும் மனவளர்ச்சி குன்றியோருக்கு உணவு வழங்கி கொண்டாடியது மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு பள்ளிப் பாடத்திட்டத்தில் ஓவியம், தையல் போன்ற சிறப்பு பாடல்களை இடம்பெறச் செய்துள்ளது போல, தற்போது வளர்ந்து வரும் அழகு கலையையும் சிறப்பு பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும், அழகுக்கலை தொழிலில் விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என வறுமையில் வாடும் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தங்களுக்கு முதலீடு செய்து தொழில் துவங்க முடியாமல் பரிதவிப்பதாகவும் அதனால், வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கி அந்தப் பெண்கள் தொழில் துவங்க அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.